home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

துங்கபத்ரா நதி, பிசாலி. நன்றி:meerasubbarao.wordpress.com

ஶ்ரீ வியாச ராஜாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஹனுமார்:

ஶ்ரீ முக்கிய பிராணா [அனுமார்] திருக்கோயில், பீசலி, ரெய்சூர் மாவட்டம், கர்நாடகம்

ஜி.கே.கௌசிக்


குரு இராகவேந்திராவின் பிருந்தாவன பிரவேசம்

குறிப்பிட்ட தினத்தன்று (விரேதிகிருத் ஸம்வத்ஸரே ஶரவண கிருஷ்ண பக்ஷே துவிதியாம் -1671 A.D.), ஆயிரகணக்கான பக்தர்கள் மான்சாலா (ஶ்ரீ மந்திராலயா)வில் ஒரு மகான் பிருந்தாவனத்தில் [சமாதியில்] பிரவேசிக்கும் அரிதான நிகழ்வை தர்சிக்க குழுமியிருந்தார்கள். குரு ஶ்ரீஇராகவேந்திரா தனது தினசரி ஶ்ரீமூல இராமனுக்கு செய்யும் பூஜைகளை செய்தார். பின் தனது சீடர்களுடன் உரையாற்றினார்.

பின் அமைதியாக வீணா வாத்தியத்தை எடுத்து பைரவி ராகத்தில் அமைந்த "இன்து எனகே கோவிந்தா.." என்று தொடங்கும் கிருதியை வாசிக்க ஆரம்பித்தார். ஶ்ரீநீலமேக ஶாமளன் கண்முன் ராகத்திற்கு இணங்க மெல்லிய தளிர் அசைவுகளுடன் நடனம் ஆடினார். ஶ்ரீஇராக்வேந்திரார் தனது முன் அவதாரமான ஶ்ரீவியாசராயராக இருந்து பிருந்தாவனம் எய்தும் சமயமும் இறைவன் இப்படி நடனமாடி அழைத்துக் கொண்டார். குரு அவர்கள் சற்று தனது நிஷ்டையில் ஆழ்ந்தார், மிக பிரகாசமான ஒளிர் விட்டார். சற்று நேரத்தில் கையிலிருந்த ஜபமாலை உருட்டுவது நின்றது, அவர் இன்னும் பிரகாசமாக ஒளிப்பிழம்பாக தெரிந்தார். சீடர்களுக்கு முன்பே கிடைத்திருந்த குருவின் கட்டளைப்படி குருவின் சிரஸில் [தலையில்] ஆயிரத்து இருநூறு சாலிகிராமங்கள் இருந்த செப்பு பெட்டியை வைத்து பிருந்தாவனத்தை மூட ஆரம்பித்தனர். குரு ஶ்ரீஇராகவேந்திரா அவர்கள் தனது பூத உடலை விட்டு வீடு பெற்றார்.

இன்றும் பிருந்தாவன வாசி

குரு ஶ்ரீஇராகவேந்திரா பிருந்தாவனம் அடைந்த பின்னும் அருளுவார் என்பதற்கு ஒரு நிகழ்ச்சியை நினைவு கூறுவோம். ஶ்ரீஅப்பனசாரியர் என்பவர் குருவிடம் மிகுந்த பக்தி கொண்ட சீடர். குரு பிருந்தாவனம் அடைவதை காண வர வேண்டும் என்று துங்கபத்திரா நதியை தாண்டுவதில் சற்றே தாமதம் ஆகியது. தனது குருவின் மீது அதீத பக்தி கொண்ட அவர் குருவை நினைத்து உருகி பாடல் பாடியவாரே ஓடோடி வந்தார். ஆனால் அவர் மான்சாலா அடைந்த பொழுது குரு பிருந்தாவனத்தில் அமைதியாகி விட்டார். ஶ்ரீஅப்பனசாரியார் பாடிய பாட்டு பாதியில் நிற்க, பிருந்தாவனத்திலிருந்து குரல் வந்தது. "ஶாக்ஷி ஹயஸ்யொத்ர ஹி" என்று - அதாவது தாங்கள் கூறியது உண்மை என்பதற்கு ஶ்ரீஹயகீரிவர் சாட்சி - என்பதாகும். இன்றும் பக்தர்கள் இப்பாடலை பக்தியுடன் பாடி குரு ஶ்ரீஇராகவேந்திரரின் ஆசிகளை பெறுவது உண்மை.

பிசாலி

ஶ்ரீ அப்பனசாரியா அவர்களின் இல்லம், பிசாலி தற்போதய மந்திராலயாவின் அருகாமையில் இருக்கும் பி[Bi]சாலி என்னும் பிக்ஷாலயாவில் பிறந்தவர் ஶ்ரீஅப்பனசாரியார். அவர் குருராயரிடம் மிகவும் பக்தியும் மரியாதையும் கொண்டவர். பிசாலி என்னும் கிராமம் துங்கபத்ரா நதியின் மந்திராலயாவின் அக்கரையில் அமைந்துள்ளது. இங்கு துங்கபத்திரா நதி அழகாவும் நளினமாகவும் ஓடுவது பார்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த இடம் ஶ்ரீமாத்வாசாரியாரின் வாழ்க்கையிலும் சம்பந்தப்பட்டுள்ளது. த்வைத சித்தாந்தத்தை முக்கியமாக பரப்பிய இவர் இங்கு உக்ர நரஸிம்மரை சிலாரூபத்தில் ஸ்தாபனம் செய்து சில காலம் பூஜைகளும் செய்துள்ளார். ஶ்ரீவியாச ராயர், குருராயரின் முன்றய அவதாரமாகும். ஶ்ரீவியாச ராயரும் இங்கு ஶ்ரீமுக்கிய பிராண தேவரை [ஆஞ்சநேயரை] பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்துள்ளார்.

ஶ்ரீ அப்பனசாரியா

குருராயருக்கு மிகுந்த சேவைகள் செய்துள்ளா ஶ்ரீஅப்பனசாரியார் இந்த கிராமத்தில் பிறந்தார். இருபத்தி எட்டு கிரமங்களுக்கு ஜாகீர்தாரான ஶ்ரீ இராமசுப்பனாசாரியார் என்னும் மிக பெரிய பண்டிதருக்கு புதல்வனாக பிறந்தார். நிபுணரான தந்தையிடமிருந்து த்வைத சித்தாந்தத்தின் நெளிவு சுளிவுகளை கற்று மிக தேர்ச்சிப் பெற்ற வேதாந்தியானார் அப்பனசாரியார். அவர் சமயத்தில் த்வைத சித்தாந்தத்தில் கரைதேறியவரான அவர் அருகிலிருக்கும் கிராமத்தில் உள்ள மற்ற பிறருக்கும் கற்பித்தார். இவருடைய புலமையும், அப்பழுகற்ற சொல் திறனும் இவரை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இவரது குருகுலத்திற்கு தூர தேசத்திலிருந்து கூட மாணாக்கர்கள் வரலாயினர்.

பிக்ஷாலயா என்னும் தலம்

அக்கால குருகுல வழக்கப்படி மாணாக்கர்கள் குருகுல மாணவர்களுக்காக கிராமம்தோரும் பிச்சை [பிக்ஷா] எடுத்து வருவார்கள். கிரஹஸ்தர்கள் அக்காலத்தில் பிக்ஷா போடுவதை தங்கள் தர்மமாக கருதினார்கள். வளமான கிராமம் என்பதால் பிக்ஷைக்கு குறைவிருக்காது. கிரஹஸ்தர்கள் பிக்ஷை இடுவதற்கு தினமும் ஆவலாக காத்திருப்பார்கள். அதனாலேயே இந்த கிராமத்திற்கு பிக்ஷாலயா என்று பெயர் வந்தது.

பிக்ஷையின் மகிமை

ஶ்ரீமாத்வாசாரியார் பூஜித்த ஶ்ரீஉக்ர நரசிம்மன், பிசாலி இப்படி சேகரிகிக்கப்பட்ட அரிசியை மாணவர்கள் துங்கபத்ரா நதி நீரில் அலம்புவார்கள். பின் அவ்வரிசியை ஒரு பெரிய துண்டில் வடிவதற்காக கட்டுவார்கள். அதனை ஶ்ரீஅப்பனசாரியார் அவர்கள் அமர்ந்திருக்கும் மேடை அருகே உள்ள மரகிளையில் கட்டிவிடுவார்கள். சாப்பாட்டு நேரம் வந்ததும், ஶ்ரீஅப்பனசாரியார் எழுந்திருந்து கட்டி தொங்கிக்கொண்டுள்ள அரிசி முடிச்சில் நீர் தெளிப்பார் [ப்ரேக்ஷணம்]. அங்குள்ள தெய்வங்களுக்கு நிவேதனம் செய்வார். பின் மாணாக்கர்கள் யாவருக்கும் பறுமாரப்படும். இதில் அதிசயம் என்னவென்றால், தீயில் இடாமலே அரிசி, அன்னமாக [சோறாக] ஆகியிருக்கும். ஶ்ரீஅப்பனசாரியார் அவர்களும் தனது மாணாக்கர்களுடன் தான் உணவை பகிர்ந்துக் கொள்வார். மாத்வரின் சித்தாந்தங்களையும் வேதங்களையும் ஶ்ரீஅப்பனசாரியார்கள் உபதேசிக்க உயயோகித்த மேடையை ஜபதகெட்டே என்ற அழைப்பார்கள். [ஜபதகெட்டே என்றால் ஜபம் செய்ய உபயோகிக்கும் பலகை என்பது பொருள்]

புனித தலம் பிக்ஷாலயா

ஶ்ரீஅப்பனசாரியார் அமர்ந்து பாடம் சொல்லிக்கொடுக்கும் மேடை ஶ்ரீமாத்வாசாரியார் பூஜித்த ஶ்ரீஉக்ர நரசிம்மன் திருவுருவத்திற்கு மிக அருகில் அமைந்திருந்தது. ஶ்ரீவியாச ராயர் இந்த க்ஷேத்திரத்தில் தங்கியிருந்த பொழுது தினம் ஹோமங்கள் செய்வார். அவர் தான் செய்த ஹோமகுண்டலத்திலிருந்து ரக்ஷையை [சாம்பல்] எடுத்து அருகில் இருந்த பாறையில் ஶ்ரீமுக்கிய ப்ராண தேவரின் [ஶ்ரீஹனுமாரின்] உருவத்தை வரைவார். நாளாவட்டத்தில் அந்த சித்திரம் மெதுவாக சிற்பமாக மாறிற்று. இந்த இரு திருவுருவத்தின் முன் அப்பனசாரியார் பாடங்கள் சொல்லி கொடுத்திருக்கிறார். அவர் முழு சிரத்தையுடன் மாணவர்களுக்கு கற்பித்திருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக ஶ்ரீஉக்ர நரசிம்மரும், ஶ்ரீஅனுமாரும் அரிசியை நெருப்பில்லாமல் அன்னமாக்கி கொடுத்துள்ளார்கள் என்பது தெள்ளம்தெளிவாக தெரிகிறது.

ஶ்ரீகுரு ராயரின் வருகை

ஶ்ரீகுரு ராயர் மான்சாலாவில் [மந்த்ராலயாவில்] தனது கடைசி தினங்களை கழிப்பது என்று தீர்மானித்தார். அதோனியின் திவானான ஶ்ரீவெக்கண்ணா நவாபின் அனுமதியுடன் மான்சாலா கிராமத்தை ஶ்ரீகுருராயரின் உபயோகத்திற்கு கொடுத்துவிட்டார். இங்கு குருராயர் தங்கியிருந்த சமயம் அப்பனசாரியா குருராயரை சந்திக்க தனது கிராமத்திலிருந்து துங்கபத்ரா நதியை தாண்டி வருவது வழக்கமாயிற்று. சில சமயம் குருராயரும் பிக்ஷாலயா செல்வார். இருவரும் வேதாந்த விஷயங்களை விவாதிப்பார்கள். தனது முற்பிறவியில் வியாசராயராக இருந்த பொழுதும் இங்கு வந்து யாகங்கள் பல செய்தமையால் பிக்ஷாலயாவின் மேல் குருராயருக்கு அலாதி பிரியமுண்டு. குருராயரை ஜபதகெட்டேயில் உட்கார வைத்து தான் கீழே அமர்ந்து த்வைத சம்ரதாய விசயங்களை விவாதிப்பார்கள். சில சமயம் நதியின் நடுவில் இருக்கும் பாறையில் இருவரும் அமர்ந்து விவாதங்கள் நடத்துவார்கள்.

பிக்ஷாலயாவில் குருராயரின் முகாம்

ஶ்ரீகுருராயரின் சிலா பிருந்தாவனம், பிசாலி குருராயரின் பிக்ஷாலயா முகாமின் போது, ஆப்த சீடரான ஶ்ரீஅப்பனசாரி அவர்கள் தனது குருநாதர் ஶ்ரீகுருராயரின் தேவைகளை பார்த்து பார்த்து செய்தார். தனது உன்னத சீடரின் உபசரிப்பை குருராயரும் ஏற்று, ஶ்ரீஅப்பனசாரியார் வீட்டிலேயே தங்கியிருந்தார். பிக்ஷாலயாவில் குருராயர் தங்கியிருந்த காலத்தில் ஶ்ரீஅப்பனசாரியார் அவர்கள் தானே குருராயருக்காக சமையல் செய்தார். இன்றும் பிக்ஷாலயா சென்றால் குருராயர் அப்பனசாரியார் வீட்டில் பூஜை செய்த இடத்தை பார்க்கலாம்.

புனிதமான பாறை

ஶ்ரீஇராமரும், ஶ்ரீசீதா பிராட்டியாரும் அவர்கள் வனவாசத்தின் போழுது அமர்ந்திருந்த பாறையை ஶ்ரீகுருராயர் மாதவரம் என்னும் கிராமத்தில் அடையாளம் கண்டார். அக்கல்லையே தனது இறுதி இருப்பிடத்தில் இருத்திக்கொள்வது என்று தீர்மானித்தார். அந்த கல்லினால் தான் ஶ்ரீகுருராயரின் பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது. அக்கல்லில் ஒரு பாகத்தில் ஶ்ரீபிராண தேவருக்கு விக்ரஹம் வடிக்கப்பட்டு பிருந்தாவனத்திற்கு நேர் எதிரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதே கல்லில் மற்றொரு துண்டில் ஶ்ரீபிராண தேவரு வடிவமைக்கப்பட்டு பிக்ஷாலயாவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீகுருராயரின் பிருந்தாவன பிரவேசத்திற்கு பின்

நிச்சயக்கப்பட்ட தினத்தில் மந்திராலயாவில் ஶ்ரீகுருராயர் பிருந்தாவனம் பிரவேசித்தார். ஶ்ரீஅப்பனசாரியாரின் பக்தியை மிக உயர்வானது என்பதை பிருந்தாவனத்தின் உள் இருந்து ஶ்ரீகுருராயர் தெள்ள தெளிவாக கூறினார். தனது குருதேவரின் பூத உடல் இல்லாத போதும் அப்பனசாரியார் மந்திராலயத்திற்கு வந்து ஶ்ரீகுருராயரின் பிருந்தாவனத்தில் தியானம் செய்வார். வயது முதுமை காரணமாக அவருக்கு இங்கு வந்து செல்வது சற்றே கடினமாயிற்று. கருணையாம் குரு, ஶ்ரீகுருராயர் அப்பனசாரியாரின் கனவில் "த்வைத வேதாந்தத்தை பற்றி பல விசயங்களை நாம் பிக்ஷாலயாவில் ஜபதகெட்டேவில் இருந்து விவாதித்து இருக்கிறோம். அங்கு எனக்கு "சிலா பிருந்தாவனம்" ஒன்று கட்டவும். தாங்கள் மந்திராலயம் வர வேண்டாம், தாங்களுக்கு நான் அங்கே ஜோதிரூபத்தில் காட்சிதருகிறேன்." என்று ஆசிகள் வழங்கினார்.

ஶ்ரீஅப்பனசாரியா ஶ்ரீகுருராயரின் சீரான பக்தனாக ஜபதகெட்டேயில் சிலா பிருந்தாவனம் கட்டினார். பிசாலியில் அவர் அமைத்த சிலா பிருந்தாவனத்தில் ஶ்ரீகுருராயருக்கு, மற்றும் ஶ்ரீபாதராஜா பிரிதிஷ்டை செய்த ஶ்ரீஉக்ர நரசிம்மர், ஶ்ரீவியாசராயா பிரிதிஷ்டை செய்த ஶ்ரீப்ராண தேவருக்கு [ஶ்ரீஹனுமார்] நித்ய பூஜை நடக்கிறது. ஶ்ரீஅப்பனசாரியார் அவர்களின் சந்ததிகள் இவ்விடத்தின் புனித தன்மை மாறாமல் பூஜைகள் செய்தும் பராமரித்தும் வருகிறார்கள்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீ முக்கிய பிராணா திருக்கோயில், பீசலி, ரெய்சூர்"

 

அனுபவம்
பிசாலியின் தனித்தன்மையை, புனிததன்மையை வார்த்தைகளால் கூறமுடியாது, அங்கு சென்று தான் அனுபவிக்க வேண்டும். நளினமாக ஓடும் அழகிய துங்கபத்ரா நதியின் கரையில் ஶ்ரீமாத்வாசாரியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஶ்ரீஉக்ர நரசிம்மர், ஶ்ரீவியாசராயா பிரிதிஷ்டை செய்யப்பட்ட ஶ்ரீப்ராண தேவர் [ஶ்ரீஹனுமார்], ஶ்ரீகுருராயரின் பிருந்தாவன கல்லினாலே செய்யப்பட்ட மற்றொரு ஶ்ரீப்ராண தேவர், ஶ்ரீகுருராயரின் சிலா பிருந்தாவனம் என்று அனைத்தும் நிறைந்த இடமிது என்பதை நாம் உணர்வோம். நமக்கு அவர்களின் அருளாட்சி கிடைப்பது புரியும். அனுபவிக்கதான் வேண்டும். அனுபவிக்கதான் முடியும்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+