home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீ ஹனுமான் பாடி [பழையது] அலிகஞ் லக்னோ உத்திர பிரதேசம்

சொர்கீய பண்டித் தேவ்ராஜ் திருபாதி, மற்றும் திரு சிவாநன்த்


லக்னோ

இன்று உத்திர பிரதேசத்தின் தலை நகரமாக விளங்கும் லக்னோ மிக பழமையான நகரங்களில் ஒன்று. கங்கை நதியின் கிளை நதியான கோமதியின் இரு கரைகளிலும் பரந்து இருக்கும் நகரம் இது. நளினம், உபசரிப்பு, உயர்ந்த பண்பாடு இவைகளுக்கு பெயர் போன நகரமாக இது விளங்கியுள்ளது. அவத் நவாப்களின் இருப்பிடமான இது, அவர்களின் கேளிக்கைகளுக்கும், உல்லாசத்திற்கும் உறைவிடமாக இருந்தது. கதக் நடனம், உயர்ந்த உருது பாடல்கள், மேம்பட்ட மென்மையான மொழி இவைகள் நவாப்கள் இந்நகருக்கு விட்டுச் சென்ற செல்வங்கள்.

அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள், கோபுரங்கள் அழகிய வேலைபாடுகள் கொண்ட தோரண வாயில்கள் ஆகியவை இன்றும் அந்த பாரம்பரியத்தை பறைசாற்றிக் கொண்டுள்ளன.

லக்னோ நவாப்கள்

ஶ்ரீ ஹனுமான் பாடி [பழையது] அலிகஞ் லக்னோ அவத் நவாப்களின் முன்பிருந்தே இந்த நகரம் மிடுக்குடன் செழிப்பாக இருந்திருக்கிறது. லக்னோவின் பழையப் பெயர் லக்ஷ்மண்புரி என்பதாகும். ஶ்ரீராமரின் சகோதரனின் பெயரில் இந்நகரம் அழைக்கப்பட்டு வந்துள்ளது. பெருமை வாய்ந்த இந்நகரில் நவாப்களால் கட்டப்பட்ட மிக அருமையான கோயில் ஒன்று உள்ளது. ஆம் ஶ்ரீஹனுமானுக்காக அவர்கள் கட்டியுள்ள கோயில் அலிகஞ் என்னும் இடத்தில் உள்ளது. இங்கு எல்லா மதத்தினரும் வழிபாடு செய்ய வருகிறார்கள். நவாப்கள் ஹனுமாருக்காக ஒரு கோயில் அல்ல இங்கு இரண்டு கோயில்கள் எழுப்பியுள்ளர்கள்.

கோயில் வரலாறு
ஶ்ரீராமரின் முடிவு

மிக கடினமான் தீர்மானம் தான் அது. ஶ்ரீராமர், தனது ஒரு குடிமகன் கூறிய குறையிற்காக மாதா சீதாவை நாடு கடத்த, கானகம் அனுப்ப தீர்மானித்த்து. இத்தீர்மானத்தை நிறைவேற்ற அவர் தம்பி ஶ்ரீ லக்ஷ்மணனையும் பக்தன் ஶ்ரீ ஹனுமாரையும் தேர்ந்தெடுத்தார். எப்படிப்பட்ட காரியத்தைச் செய்யச் சொல்கிறார் அண்ணா என்று தம்பிக்கு பிரமிப்பு. அதை விட அதிர்ச்சி ஶ்ரீ ஹனுமாருக்கு. இருந்தும் ஶ்ரீராமருடைய காரியம் என்பதால் இருவராலும் மறுக்க முடியவில்லை.

அயோத்யா எல்லை

ஶ்ரீலக்ஷ்மணரும் ஶ்ரீஹனுமாரும் சீதா மாதாவை கானகம் அழைத்துச் செல்ல அயோத்தியாவிலிருந்து புறப்பட்டனர். கோமதி நதி கரையில் அமைந்துள்ள மஹரிஷி மாண்டவ்யா அவர்களின் ஆச்ரமத்தை அடைந்தனர். தாமரை தடாகமும், நதிகரையும், பூங்காவனமும் அமைதியை காத்தது. மாலை நேரமானதால் ஶ்ரீலக்ஷ்மணன் எல்லோரும் ஆச்ரமத்தில் இரவு இருந்துவிட்டு காலை பிரயாணத்தை தொடரலாம் என்றார்.

ஆனால் சீதா மாதா இதற்கு மறுத்து விட்டார். ஶ்ரீராமரின் கட்டளைப்படி அயோத்தியாவின் எல்லையை தாண்ட வேண்டும். நதியை தாண்டினால் எல்லையை தாண்டியதாகும். ஆதலால் ஆச்ரமத்தில் இளைப்பாராமல் கோமதி நதியை தாண்டி ஶ்ரீராமரின் தீர்மானத்தை நிறைவேற்றி விட வேண்டும் என்று கூறினாள். அதன்படி ஶ்ரீஹனுமாருடன் சீதா மாதா கோமதி நதியின் அக்கரைக்கு செல்லவும், ஶ்ரீலக்ஷ்மணர் தனது மாலை வந்தனங்களை ஆச்ரமத்தில் முடித்துக் கொண்டு அக்கரை வருவது என்று முடிவாயிற்று.

அயோத்யா எல்லை தாண்டுதல்

அப்படியே ஶ்ரீஹனுமார் சீதா மாதா உடன் கோமதி நதியினை கடந்தார். சரியான இடம் பார்த்து மாதாவுக்கு சௌகரியம் செய்துக் கொடுத்து தனது காவல் புரியும் கடமையை ஶ்ரீஹனுமார் துவங்கினார். ஶ்ரீலக்ஷ்மணரால் அன்று இரவு கோமதியை தாண்ட முடியவில்லை, அவர் அயோத்யா பகுதியிலேயே இருக்க வேண்டியதாகியது. ஶ்ரீஹனுமார் இங்கு இரவு முழுவதும் மாதா சீதா தேவியின் காவல் இருந்தார்.

ஹனுமான் பாடி

ஶ்ரீஹனுமார் மாதா சீதா தேவிக்கு காவல் ஏவல் புரிந்த இடம் புனிதமாக கருதப்பட்டு மக்களால் ஆராதிக்கப்பட்டு வந்தது. காலப் போக்கில் அங்கு ஶ்ரீஹனுமாருக்கு கோயில் எழுப்பப்பட்டது. ’ஹனுமான் பாடி’ என்று அழைக்கப்படும் அலிகஞ்சில் உள்ள பழைய ஹனுமார் கோயில் தான் இந்த புனிதமான இடம். பதிநான்காம் நூற்றாண்டில் இவ்விடத்தை ’இஸ்லாம் பாடி’ என்று பெயர் மாற்றம் செய்தனர் அன்றைய அரசாங்கம்.

நவாப் அரசாட்சியின் பொழுது ஹனுமான் பாடி பழைய ஹனுமார் கோயிலின் பராமரிப்பை அரசே மேற்கொண்டது. அயோத்யாவிலுள்ள ’படி சாவடி’யின் நிர்வாகமும் இந்த கோயில் நிர்வாகமும் ஒருமைப்பட்டன.

பேகம் அலியாவும் ஹனுமார் பாடியும்

பேகம் அலியா என்பவர் இக்கோயிலிலுள்ள ஶ்ரீஹனுமாரிடம் பக்திகொண்டவராக இருந்தார். அடிக்கடி இக்கோயிலுக்கு வரும் அவர் கோயிலை விரிவுபடுத்தி கட்டினார். அருகாமையில் குளம் வெட்டினார்.

1783-ல் நடந்த சம்பவம் ஒன்று

மார்வார் பகுதியிலிருந்து ஒரு வியாபாரி கஸ்தூரி, கேசர் [குங்கும பூ] முதலிய விலையுயர்ந்த பொருட்களை லக்ஷ்மணபுரிக்கு விற்பனை செய்ய எடுத்து வந்தார். இந்நகரத்தில் இருப்பத்தி மூன்று நாட்கள் சுற்றிய பிறகும் அவைகளை அவர் விற்பனை செய்ய முடியவில்லை. லக்ஷ்மணபுரி போன்ற செல்வந்தர்கள் மிகுந்த நகரத்தில் கஸ்தூரி, கேசர் முதலியவற்றை விற்க முடியாதது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

அன்று மாலை முகம்,கை,கால் கழுவிய பின் அருகாமையில் இருந்த கோயிலுக்கு சென்று தனது பிராத்தனைகளை சமர்பித்தார். அந்த ஹனுமார் கோயிலில் தனது வேண்டுகோளையும் வைத்தார். இருக்கும் பொருள்களை விற்றுவிட்டு மார்வாரில் மனைவி மக்களை பார்க்க செல்ல வேண்டும் என்பதால் வழி காட்ட வேண்டினார். பிராத்தனைகளை முடித்துக் கொண்டு அருகாமையில் இருந்த சத்திரத்தில் இரவு தங்க சென்றார்.

மென்மையான பூங்காற்று வீச தொடங்கியது. வியாபாரி கொண்டு வந்திருந்த கஸ்தூரி, கேசர் இவைகளின் வாசமும் காற்றில் மிதக்க ஆரம்பித்தது. முன் இரவு வேளையில் அவ்வழியே உலாவச்சென்ற வாஜித் அலி ஷா நவாப்பும் அவரின் பேகத்தையும் இந்த சுகந்தமான வாசம் தீண்டியது. பேகத்தை நிலை கொள்ளாமல் செய்தது அந்த வாசம். அவ்வாசனை எங்கிருந்து வருகிறது என்பதை கூட வந்த காவலரை கண்டுபிடிக்க அனுப்பினார்கள். மார்வாரிலிருந்து வந்து சத்திரத்தில் தங்கியிருக்கும் வியாபாரியை, நவாப்-பேகம் முன் கொண்டு நிறுத்தினர்கள் காவலர்கள்.

பேகம் அவர்கள், வியாபாரி கொண்டு வந்த அனைத்து கஸ்தூரியையும் குங்குமபூவையும் [கேசர்] நல்ல விலைக் கொடுத்து வாங்கினார். வியாபாரியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஹனுமாரின் மகிமையை அன்று அவர் உணர்ந்தார். காலத்தில் அக்கோயிலுக்கு நிறைய நன்கொடைகள் வழங்கினார். மார்வாரியை ஆட்கொண்ட அவ்வனுமார் – ஹனுமார் பாடி என்னும் அலிகஞ் பழைய ஹனுமார் கோயிலில் உறையும் ஹனுமார் என்று சொல்லவும் வேண்டுமா?

எம்மதமும் சம்மதமே

கோயில் கோபுரத்தின் உச்சியில் காணப்படும் பிறையும் நக்ஷத்திரமும் பேகம் அலியாவினால் கோயில் ’புனர் உத்தாரணம்’ செய்யப்பட்ட போது செய்விக்கப்பட்டது. ஶ்ரீஹனுமார் மீது பேகம் அலியாவுக்கு அளவு கடந்த பக்தியுண்டு, அவர் தனது ஷாஹாதாத் அலி கானை ’மங்களு’ என்று அழைப்பார். [மங்கள் என்பது ஹனுமாரை குறிக்கும் பெயர்]

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீ ஹனுமான் பாடி [பழையது], அலிகஞ், லக்னோ"

 

அனுபவம்
ஶ்ரீஹனுமார் மூர்த்தி சிறியதே, அவர் குடி கொண்டுள்ள கோயிலும் சிறியதே. ஆனால் அவர் அருளும் ஆசிகள் நினைக்க முடியாத அளவு பெரியவை. காத்து, அருளும் அனுமார் அவரை கரம் கூப்பி சரணடைவோம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு மார்ச் 2015
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+