ஶ்ரீமாத்வாசாரியாரின் சீடர் ஶ்ரீபத்மநாப தீர்த்தர் அவர்கள். ஶ்ரீமாத்வாசாரியார் அவர்களே இவருக்கு பூஜைக்காக ஶ்ரீகோபிநாத சுவாமி விக்ரஹம் அனுகிரஹம் செய்து கொடுத்தார். ஆசாரியாரின் பிரம்மசூத்திர வியாக்யானம் முதலிய முப்பத்திஏழு கிரந்தங்களை வடித்து தந்தார். முதல் முதலாக துலுநாடுக்கு வெளியே த்வைத வேதாந்தத்தை பரப்பியவர் இவர்.
இவர் ஸ்தாபித்த மடம் ஶ்ரீபத்மநாப தீர்த்தர் மடம் என்று அழைக்கப்படலானது. இவரது காலத்துக்கு பின் இவரது சீடர்கள் த்வைத வேதாந்தத்தை பரப்புவதில் ஈடுபட்டனர். இம்மடத்தின் பரம்பரையில் எட்டாவது ஆசாரியராக இருந்தவர் ஶ்ரீசுவர்ணவர்ண தீர்த்தர் ஆவார். இவர் லக்ஷ்மிநாராயணன் இன்னும் பாலகனுக்கு சன்யாச ஆஸ்ரமம் வழங்கி ஶ்ரீலக்ஷ்மிநாராயண தீர்த்தர் என்று பட்டம் சூட்டினார். ஆசாரியர் அவர் போகுமிடமெல்லாம் இவரை அழைத்து செல்வார், வேதாந்தத்தை கற்றுக் கொடுப்பார்.
ஒரு சமயம் ஶ்ரீசுதாவிற்கு வியாக்யானம் ஆசாரியரிடமிருந்து கற்றுக் கொண்டிருந்த சமயம், இருவரும் கோபல் என்னும் இடத்தில் உத்திராதி மடத்தில் இருந்தனர். உத்திராதி மடத்தின் ஆசாரியராக அச்சமயம் இருந்தவர் ஶ்ரீரங்கநாத தீர்த்தர் அவர்கள். ஶ்ரீலக்ஷ்மிநாராயண தீர்த்தர் அவரது ஆசாரியரிடம் பாடம் படிப்பதை ஊற்று கவனித்தார். இச்சிறுசன்யாசி மிகவும் கடினமான ஸ்லோகங்களையும், பதங்களையும் அதன் வியாக்யானத்தையும் மிகவும் சுலபமாக கிரஹித்துக் கொள்வதை கண்டு வியப்புற்றார். அவரின் ஞானத்தை கண்ட ஆச்சரியத்தில் "நாங்கள் எல்லாம் ’ஶ்ரீபாதர்கள்’ [ஆசாரியர்கள்], ஆனால் இவரோ ’ஶ்ரீபாதராஜா’ [ஆசாரிய தலைவன்]" என்று புகழாரம் சூட்டினார். அதன் பிறகு ஶ்ரீலக்ஷ்மிநாராயண தீர்த்தருக்கு ’ஶ்ரீபாதராஜா’ என்ற பட்டமே நிலைத்து விட்டது.
ஶ்ரீலக்ஷ்மிநாராயண தீர்த்தர் தனது ஆசாரியர் ஶ்ரீசுவர்ண தீர்த்தருடன் ஶ்ரீரங்கநாதரை ஆராதித்துக் கொண்டு ஶ்ரீரங்கத்தில் தங்கியிருந்தார். ஶ்ரீவைணவ சம்பிரதாயத்தில் ஆசாரியர்களால் பகவான் ஶ்ரீநாராயணனின் புகழ் பாடிய தமிழ் பாசுரங்களை ஶ்ரீரங்கத்தில் இவர் அனுபவித்தார். இவ்வனுபவம் இவரை த்வைத வேதாந்தத்தை குறித்து இருக்கும் கிரந்தங்களை கன்னடத்தில் பாட வேண்டும் என்று தூண்டியது. முதலில் ஶ்ரீமதநந்த தீர்த்தர் எழுதிய ’ஹரிஸர்வோத்தமதத்வ’ என்ற கிரந்தத்தை கன்னடத்தில் படைத்தார். ஶ்ரீமாத்வாசாரியாரால் உபதேசிக்கப்பட்ட த்வைத வேதாந்த சாரத்தை சாமான்ய மனிதனும் கிரகிக்க வேண்டும் என்றால் அதனையே மிகவும் எளிதாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதை இவர் உணர்ந்தார்.
’ஹரிதாஸர்கள்’ என்னும் பக்தி இயக்கத்திற்கு இவர் ஶ்ரீநரஹரி தீர்த்தருடன் சேர்ந்து வித்திட்டவர் என்று நம்பபடுகிறது. இவருடைய கீர்த்தனைகள் மிகவும் சுலபமாக புரியும்படி சுலபமான வார்த்தைகளை பிரயோகம் செய்து எழுதப்பட்டது. இவருடைய கீர்த்தனைகளில் ’ரங்க விட்டலா’ என்னும் பதம் இருக்கும். சாமான்யர்களால் மிகவும் விரும்பப்பட்ட, பாடப்பட்ட கீர்த்தனைகளாக இவை அமைந்தன.
ஶ்ரீபாதாராஜா ஶ்ரீரங்கத்திலிருந்து மற்ற இடங்களுக்கு சென்று ஶ்ரீமாத்வாசாரியாரின் த்வைத வேதாந்தத்தின் மகிமைகளை பரப்பலானார். அக்கால கட்டத்தில் முல்பாகல் க்ஷேத்திரத்தில் த்வைத வேதாந்தத்தை கற்பிக்க ஏற்ற இடமாக கருதப்பட்டது. ஶ்ரீ ஶ்ரீபாதாராஜா முல்பாகல் க்ஷேத்திரத்தில் த்வைத வேதாந்தத்தை கற்பிக்க பாடசாலை நிறுவினார். இவரிடம் இங்கு படித்த சீடர்களில் ஶ்ரீவியாசராஜரும் ஒருவர். ’வாக்வஜ்ர’ [वाग्वज्र] என்னும் நூல் ஒன்றே இவர் எழுதிய ஸம்ஸ்கிருத கிரந்தம், மற்றவை எல்லாமே கன்னட மொழியில் எழுதியவைகளே. இவரது சீடர் ஶ்ரீவியாசராஜரை பல கிரந்தங்கள் ஸம்ஸ்கிருத மொழியில் எழுத தூண்டினார். இவருடைய எழுத்தின் எளிமை காரணமாக இறைவனின் மீது பக்தியை பரப்புவது சுலபமானது, அதனால் இவரை ’தாஸ பந்த ப்ரவர்த்தகா’ என்று அழைக்கலானார்கள்.
பஜார் வீதியில் உள்ள இடத்தில் தான் ஶ்ரீபாதராஜ தீர்த்தர் அவர்கள் தனது மடத்தை ஸ்தாபித்தார். இங்கு தான் இவர் தனது சீடர்களுக்கு வேதாந்தம் சொல்லிக் கொடுத்தார். இம்மடத்தில் ஶ்ரீலக்ஷ்மிநாராயணரை பிரதிஷ்டை செய்து நித்ய பூஜை செய்தார். இவர் இங்கு ஶ்ரீவியாசராஜரின் ’வித்யா குரு’வாக இருந்தார். இவ்விடத்தில் தான் இவ்விரண்டு முனிவர்களையும் தேவதைகள் புஷ்பம் தூவி தங்கள் ஆசிகளை அநுகிரஹித்தனர். எவ்விடத்தில் இந்நிகழ்ச்சி நடந்ததோ அவ்விடத்தில் இன்று துளசி மாடம் வைத்து பவித்திரமாக பராமரிக்கப்படுகிறது. ஶ்ரீவியாசராஜா அவர்கள் ஶ்ரீபாதராஜாவிடம் இங்கு பன்னிரண்டு ஆண்டுகள் ’வித்யா’ சீடராக இருந்தார்.
ஶ்ரீபாதராஜா அவர்கள் ஒரு நாள் மடத்தின் நித்யபூஜையை ஶ்ரீவியாசராஜாவை செய்யச்சொன்னார். அன்று ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பூஜைக்கு தயாரான ஶ்ரீவியாசராஜாவின் கவனம் [இன்று வரை] திறக்காமல் இருந்த சம்படத்தின் மீது விழுந்தது. ஆர்வத்தின் காரணமாக, அவர் அதைத் திறக்க முயன்றார், திறந்தும் விட்டார். ஶ்ரீருக்மணி ஶ்ரீசத்யபாமா சமேத ஶ்ரீகோபாலகிருஷ்ணரின் வியக்கத் தக்க விக்ரஹங்கள் உள்ளே இருப்பதை பார்த்து ஶ்ரீவியாசராஜாவிற்கு ஆனந்தம் தாங்கவில்லை. ஆனந்தத்தின் வெளிப்பாடாக அவர் பாட ஆரம்பித்தார், ஶ்ரீகோபாலகிருஷ்ணர் அவர் கண் முன் ஆடுவது அவருக்கு தெரிந்தது. சம்படத்தில் இருந்த சாலிகிராமத்தைக் கொண்டு தாளமும் போட ஆரம்பித்தார். ஆனந்தமாக பாடிய வண்ணம் மடத்தின் குளத்தில் ஸ்நானம் செய்ய சென்றார். நீரில் முழுகும் போது பாடுவது நின்றது. பாட்டு நின்ற அத்தருணத்தில் திரும்பவும் ஶ்ரீவியாசராஜா பாட்டை ஆரம்பிக்க வேண்டி காத்திருப்பது போல் ஶ்ரீகோபாலகிருஷ்ணரின் நடனமும் நின்றது.
ஒன்பது துவாரம் இருக்கும் ஜன்னல் வழியாக இந்நிகழ்வினை ஶ்ரீபாதராஜா அவர்கள் கண்டு களித்தார். "என்னால் இந்த சம்படத்தை திறக்க முடியவில்லை. பகவான் உனக்கு தரிசனம் கொடுத்து இவ்விக்ரஹம் உனக்கு தான் என்று தெரிவித்துள்ளான். இவரை நீயே பூஜிப்பாயாக." என்று கூறி அவ்விக்ரஹத்தை அவரிடம் பூஜைக்காக ஒப்படைத்தார். இன்றும் ஶ்ரீவியாசராஜ மடத்தில் அபூர்வமான நடன கர்ணத்தில் இருக்கும் ஶ்ரீகோபால கிருஷ்ணரின் இந்த அதிசயமான சிலை அவரின் பரம்பரையில் வந்த யதிகளால் பூஜை செய்யப்பட்டு வருகிறது.
பின் நாட்களில் ஶ்ரீவியாசராஜா அவர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் ராஜ குருவானார். சாம்ராஜ்யம் சங்கமர்களிடமிருந்து சாளுவர்களிடம் சென்றது இருந்தும் இவரே ராஜ குருவாக இருந்தார், மன்னர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் கொடுத்து வந்தார். தென் இந்தியாவில் பல இடங்களில் பற்பல அனுமார் கோயில்களை இவர் கட்டியுள்ளார் என்பது பலரும் அறிந்த விஷயம். இந்த மிகவும் பிரசித்தமான ஆனால் கடினமான காரியமான ஶ்ரீஹனுமார் மூர்த்தி பிரதிஷ்டை என்னும் சுப கார்யத்தை இவர் இங்கு முல்பாகலில் ஶ்ரீபாதராஜா மடத்தில் ஆரம்பித்தார் என்பது விசேடம். அவருடைய ’வித்யா குரு’வாகிய ஶ்ரீபாதராஜா பிரதிஷ்டை செய்துள்ள ஶ்ரீலக்ஷ்மிநாராயணனின் அருகிலேயே இவர் தனது முதல் ஶ்ரீஹனுமார் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார்.
ஶ்ரீபாதராஜா பிரதிஷ்டை செய்துள்ள ஶ்ரீலக்ஷ்மிநாராயணர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இதன் அருகிலேயே ஶ்ரீவியாசராஜா அவர்கள் பிரதிஷ்டை செய்துள்ள ஶ்ரீஹனுமாருக்கான சந்நிதி அமைந்துள்ளது.
ஹனுமான், பீமன் மற்றும் மத்வாச்சார்யார் ஆகிய அவதாரங்கள், ஶ்ரீமுக்கிய பிராணரின் மூன்று அவதாரங்கள் என்று போற்றப்படுகிறது. இதனை ஸ்ரீ வியாசராஜரால் நிறுவப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஒவ்வொரு சிலையிலும் நாம் அடையாளம் காண முடியும். இந்த க்ஷேத்திரத்தில்தான் முதன்முதலாக இப்படி “அவதார த்ரய” என்று கொண்டாடப்படும் விக்ரஹம் ஸ்ரீ வியாசராஜரால் நிறுவப்பட்டது. வாலின் இறுதியில் மணியுடன் கூடிய முக்யபிரானர் என்பது ஸ்ரீ வியாச பிரதிஷ்டை முக்யபிரானரின் குறிப்பிடத்தக்க மற்றொறு அம்சமாகும்.
இந்த க்ஷேத்திரத்தின் பகவான் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் விக்ரஹம், கடினமான கிரானைட் கல்லால் செய்யப்பட்ட சுமார் இரண்டடி உயரம் கொண்டது. சிற்பம் புடைப்பு சிலை [அர்த்த சிலா] வகையை ஒத்தது. பிரபு அனுமான் தனது இடது தாமரை பாதம் கிழக்கு நோக்கி நடப்பதைப் போல் காணப்படுகிறார். அவரது வலது தாமரை பாதம் தரையில் இருந்து சற்று உயர்ந்து காணப்படுகிறது. அவருடைய இரண்டு பாதங்களும் நூபுரம் மற்றும் தண்டையால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவரது இடது கை இடது இடுப்பில் இருப்பதைக் காணலாம் மற்றும் அவரது கையில் அவர் சௌகந்திகா மலரின் தண்டைப் பிடித்துள்ளார் [இது ஸ்ரீ பீமா அவதாரத்தை குறிக்கிறது]. பாதி மலர்ந்த நிலையில் உள்ள மலர் அவரது இடது தோளுக்கு மேல் காணப்படுகிறது. மணிக்கட்டில் கங்கணமும் மேல் கரத்தில் நூபுரமும் காணப்படுகின்றன. அவரது மார்பை பல ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன. மற்றொரு கையை மேலே உயர்த்தி, பக்தர்களுக்கு ’அபய’ முத்திரையில் அருள்பாலிக்கிறார். இறைவனின் வால் அவரது தலைக்கு மேலே வளைந்த முனையுடன் உயர்த்தப்பட்டுள்ளது, இது ஒரு சிறிய அழகான மணியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது [இது ஸ்ரீ ஹனுமானைக் குறிக்கிறது]. பிரபு செவிகளில் குண்டலம் அணிந்துள்ளார், அவருடைய கேசம் நேர்த்தியாக, குடுமியாக கட்டப்பட்டுள்ளது [இது ஸ்ரீ மத்வாச்சாரியாரைக் குறிக்கிறது]. அவரது ஒளிரும் கண்கள் பக்தர்கள் மீது கருணையை பொழிகிறது.
அனுபவம்
வாருங்கள் இவர் முன் அமருங்கள், தியானத்தில் ஈடுபடுங்கள்.
ஶ்ரீமுக்கியப் பிராணர் உங்களை அணு ஆணுவாக ஆட்கொண்டு தங்களின் தர்மமில்லா எண்ணங்களை வேரோடு
அழிப்பதை நீங்கள் உணர்வீர்கள். பிறக்கும் பொழுது எப்படி எண்ண சுத்தியுடன் பிறந்தோமோ அந்நிலையினை
அடைவதை உணர முடியும்.
தமிழாக்கம் :திரு. சுதா
பதிப்பு: நவம்பர் 2021