home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

தண்டி ஶ்ரீஹனுமார் திருக்கோயில், பேட் துவாரகா, துவாரகா, குஜராத்


தண்டி ஶ்ரீஹனுமார் திருக்கோயில், பேட் துவாரகா, துவாரகா, குஜராத்

ஜி.கே.கௌசிக்


துவாரகா

துவாரகா நகரம் ஏழு புண்ய தலங்களில் ஒன்றாக பாரதத்தில் கொண்டாடப்படுகிறது. அயோத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா என்பன மற்ற ஆறும். மதுராவில் இருந்து வந்த பிறகு ஶ்ரீகிருஷ்ணர் துவாரகையை தனது வாஸஸ்தலமாக ஸ்தாபித்தார் என்பது புராணம். பகவான் கடலில் இருந்து இம்மாகநகரை விஸ்வகர்மாவின் உதவியுடன் நிறுவினார். அவர்காலத்தில் கட்டிடங்களின் கூரைகள் தங்கத்தாலும், விலைமதிப்பான கற்கள் பதிக்கப்பட்டு காணப்பட்டன. ஶ்ரீகிருஷ்ணர் வைகுண்டம் சென்ற பிறகு, யாதவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு மின்னும் இந்நகரை அழித்தனர், பின் கடல் தான் கொடுத்த இடத்தை தானே எடுத்துக் கொண்டது.

சொர்க்க துவாரகா / மோக்ஷ துவாரகா

ஶ்ரீ த்வாரகாதீஷ் திருக்கோயில், துவாரகா, குஜராத் இன்று ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா நிறுவிய துவாரகை இல்லை. ஆனால் துவாரகை என்னும் நகரம் அரேபிய கடலோரம் பாரதத்தில் மேற்கு கோடியில் குஜராத்தில் ஜாம்நகர் மாவட்டத்தில் இருக்கிறது. அங்கு ஶ்ரீகிருஷ்ணருக்கு ஒரு மாபெரும் திருக்கோயிலும் இருக்கிறது. இக்கோயில் ஶ்ரீகிருஷ்ணரின் பேரன் ஶ்ரீவஜ்ரா அக்காலத்தில் கட்டிய அதே இடத்தில் இருக்கிறது. ஆனால் இன்று நாம் காணும் கோயில் பதினாறாவது நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த க்ஷேத்திரத்தில் பகவான் ஶ்ரீதுவாரகாதீஸ்வர் என்ற பெயரில் தரிசனம் தருகிறார். இத்திருக்கோயிலுக்கு இரண்டு வாயில்கள் உள்ளன. பக்தர்கள் கோயிலுக்கு செல்ல நுழையும் வாயில் "சொர்க்க வாயில்" என்று அழைக்கப்படுகிறது. தரிசனத்திற்கு பிறகு வெளியே வரும் வாசல் "மோக்ஷ வாயில்" என்று அழைக்கப்படுகிறது. திருக்கோயிலில் இருந்து கோமதி நதி கடலில் சங்கமிப்பதை காணலாம். ஶ்ரீயசோதா தாய் ஶ்ரீதுவாரகாதீஸ்வரரின் சன்னிதிக்கு நேர் எதிரில் இருக்கிறார். இத்திருக்கோயிலில் வாசுதேவர், தேவகி, பலராமர், ரேவதி, சுபத்ரா, ஜாம்பவதி, சத்யபாமா ஆகியவர்களுக்கும் சன்னிதிகள் உள்ளன. கவனித்தால் ஶ்ரீருக்மணிக்கு இங்கு சன்னிதி கிடையாது என்பது தெரியும்.

பேட் துவாரகா

’பேட்’ என்றால் குஜராதியில் தீவு என்பது பொருள், அதனால் அங்குள்ள தீவை "பேட் துவாரகா" என்று அழைக்கிறார்கள். சுமார் முப்பத்திரெண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தீவினை "பேட் துவாரகா" என்று அழைக்கிறார்கள். ஒஹா துறைமுகத்திலிருந்து படகில் இங்கு சென்று பேட்துவாரகாவை அடைய வேண்டும். இந்த தீவு ஶ்ரீகிருஷ்ணர் இருந்த காலத்தில் துவாரகாவின் ஒரு பகுதியாக தான் இருந்தது. அவரை அவரது பால்ய நண்பன் சுதாமா [குசேலர்] இங்கு தான் சந்தித்தார். "பேட்" என்றால் ஹிந்தியில் சந்திப்பு என்று பொருள், அதனாலும் இதற்கு "பேட் துவாரகா" என்று பெயர் வந்ததென்பர்.

தண்டி ஹனுமான் திருக்கோயில்

தண்டி ஶ்ரீஹனுமார் திருக்கோயில், பேட் துவாரகா, துவாரகா, குஜராத் பேட்துவாரகாவில் இருக்கும் ஶ்ரீகிருஷ்ணர் திருக்கோயிலுக்கு ஐந்து கிலோமீட்டர் கிழக்கில் மிகவும் அருமையான தனித்தன்மை வாய்ந்த ஹனுமார் கோயில் ஒன்று உள்ளது. இத்திருக்கோயிலுக்கு தண்டி ஹனுமார் கோயில் என்று பெயர். இக்கோயிலை பற்றி பார்க்கும் முன் நாம் சற்று இராமயண காலத்திற்கு சென்று வருவோம். அஹி இராவணனை பற்றிய புராணங்கள் சற்று வித்யாசமாகதான் காணப்படுகிறது. இருந்தும் நாம் பார்க்க இருக்கும் அஹி இராவணனும், மஹி இராவணனும் மஹராஷ்ட்ரா பஜனை பந்ததியில் வருவது போல், அதுவும் ஶ்ரீஆனந்த தனயா தேவா பந்ததியில் வருவதை போன்றிருக்கும்.

சந்திரசேனாவும் அஹி இராவணன், மஹி இராவணனும்

அஹிராவணன், மஹிராவணன் என்பவர்கள் இலங்கை மன்னர் இராவணனின் ஒன்றுவிட்ட சகோதரர்கள். அரக்கர்கள், நினைத்த உருவை எடுக்கவல்லவர்கள், ஆனால் பாதாள லோகத்தின் ஆட்சியாளர்களான இச்சகோதரர்கள் இவ்விசயத்தில் அதிசாமர்த்தியமானவர்கள், மிகவும் வல்லவர்கள். ஒரு சமயம் இவரிருவரும் ஹிமாலய பகுதிக்கு சென்றிருந்த பொழுது, அங்கு சந்திரசேனா என்ற தேவ கன்னிகையை பார்க்கிறார்கள். இருவருக்கும் அவளை மணமுடிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால் சந்திரசேனாவிற்கு இருவரிடமும் விருப்பமில்லை. அதனால் அவள் யாராவது ஒருவரை மட்டுமே மணம் முடிக்க முடியும் என்றாள். சகோதரர்கள் இருவரில் எவருக்கும் விட்டுக்கொடுக்க மனமில்லை. இருவரும் அவளை விரும்பியதால், அவளை பாதாள லோகத்திற்கு எடுத்துச் சென்று அங்கு சிறை வைத்தனர். இப்பொழுது இருவருக்கும் மனதில் பயம் கவ்வியது, தான் இல்லாத போது மற்றவன் குலதெய்வத்திற்கு தனியாக பூஜை செய்து சந்திரசேனாவை அடைந்துவிட்டால் என்ன செய்வது என்பதே அது. அதனால் அவர்களுக்குள் ஒரு உடன்பாட்டுடன் பூஜை அறையை தாளிட்டு பூட்டு போட்டனர். இருவரும் சேர்ந்து வந்தால் மட்டுமே சாவி கொடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சாவியை சந்திரசேனாவிடம் கொடுத்தனர்.

இராம இராவண யுத்தம்

இலங்கையில் இராம இராவண யுத்தம் ஒரு முடிவுக்கு வர இருந்த நேரம். இராவணனின் அனைத்து தளபதிகளும் போரில் மாண்டுவிட்டனர், இராவணனே நேரில் போருக்கு செல்ல வேண்டும் என்ற நிலை. இராவணனுக்கு திடீர் என்று ஓர் எண்ணம், பாதாள லோகத்தை ஆளும் தனது சகோதரர்கள் அஹிராவணன், மஹிராவணனை உதவி நாடலாம் என்று. இராவணனின் நிலையை புரிந்து கொண்ட சகோதரர்கள் தாங்கள் உதவுவதாக வாக்கு கொடுத்தனர்.

போர்களத்தில் கோட்டை

சகோதரன் இராவணனுக்கு வாக்கு கொடுத்த பின், இருவரும் நிலைமை அறிய போர்களத்திற்கு சென்றனர். அன்றைய போர் முடிந்து களம் அமைதியாக இருந்தது. அவர்கள் வானரம் ஒன்று குன்றின் மேல் உட்கார்ந்திருப்பதை கண்டனர். ஆச்சரியத்துடன் உற்று நோக்கினர். வானரம் தனது வாலை குன்று போல் செய்து அதன் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தது. தங்கள் மாயையின் உதவியால் அவர்கள் வாலால் செய்யப்பட்ட கோட்டையின் உள்ளே இராமலக்ஷ்மணர்கள் படுத்து உரங்குவதை கண்டனர். இவர்களுக்கு பக்கத்தில் விபீஷணனும், ஜாம்பவானும் படுத்திருந்தனர்.

அனுமாரை ஏமாற்றிய வழி

அஹிமஹி இருவரும் இந்த வாலினால் கட்டப்பட்ட கோட்டைகுள் எப்படி புகுவது என்று சற்று யோசித்தனர். அனுமாரை ஏமாற்ற அஹி விபீஷணனின் உருவமும், மஹி ஜாம்பவானின் உருவமும் எடுத்துக் கொண்டனர். சற்றே களத்தில் புரண்டனர், பின் அனுமாரின் முன் சென்று நின்றனர். உள்ளே இருக்க வேண்டியவர்கள் எப்படி இங்கே நிற்கிறார்கள் என அனுமார் யோசித்தார். அனுமாரின் சந்தேகத்தை தெளிவு செய்வது போல் அஹிமஹி சொன்னார்கள் "அனுமாரே! ஶ்ரீஇராமலக்ஷ்மணர்களுக்கு பக்கம் நின்று கொண்டிருந்தோம், புதை மணல் வழி வெளியே தள்ளப்பட்டோம். அதனால் இங்கே நிற்கிறோம்."

அஜாக்ரிதையாக இருக்க வேண்டாம் என்று சொல்லிய அனுமார் வாலின் நுனியை சற்றே தூக்கி இவர்கள் கோட்டையின் உள்ளே நுழைய வழி விட்டார். உள்ளே நுழைந்ததும் விபீஷணனையும், ஜாம்பவானையும் மயக்கமுற செய்தனர், பின் இராமலக்ஷ்மணரை எடுத்தனர், பெரிய இடி போன்ற சப்தத்தையும் மின்னல் போன்ற ஒளியையும் உண்டாக்கினர், அஹிமஹி சகோதரர்கள் இராமலக்ஷ்மண சகோதரர்களுடன் மறைந்தனர்.

இராமலக்ஷ்மணர் மறைத்து வைக்கப்பட்ட இடம்

கண் இமைக்கும் நேரத்தில் இவையெல்லாம் நடந்து முடிந்து விட்டது. அனுமார் விபீஷணனிடம் என்ன நடந்தது என்று கேட்டார். சற்று யோசித்த விபீஷணனனுக்கு இது தனது சகோதர்கள் அஹிமஹியின் சித்து என்று புரிந்து விட்டது. அனுமாரிடம் அவர்கள் இராமலக்ஷ்மணர்களை பாதாள லோகத்திற்கு எடுத்து சென்றிருப்பார்கள் என்பதை தெரிவித்தார். அனுமார் தான் பாதாளம் சென்று அவர்களை மீட்டு வருவதாக கூறி புறப்பட்டார்.

பாதாள லோகத்தில் அஹிராவணன்-மஹிராவணன்

இராமலக்ஷ்மணர்களை பாதாள அரண்மனைக்கு அஹிமஹிராவணர்கள் கொண்டு வந்தனர். மஹா தேஜஸ்வியான இருவரையும் பார்த்த சந்திரசேனா ரவணர்களிடம் விவரம் கேட்டாள். தாங்கள் வணங்கும் தெய்வத்திற்கு "பலி" கொண்டு வந்திருப்பதாக கூறி, சாவியை வாங்கி சென்றனர். கர்ப்பகிரஹத்தின் முன் இருக்கும் பலி பீடத்தில் இராமக்ஷ்மணர்களை கிடத்தி விட்டு திரும்பவும் அறையையும் கர்ப்பகிரஹத்தையும் பூட்டி சாவியை சந்திரசேனாவிடம் கொடுத்தனர். அவளிடம் சாவியை இருவரும் சேர்ந்து வந்தால் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை நினைவூட்டி சென்றனர்.

அனுமாரின் பாதாள லோக பிரவேசம்

மகரதுவஜாவும் ஹனுமாரும், தண்டி ஶ்ரீஹனுமார் திருக்கோயில், பேட் துவாரகா, துவாரகா, குஜராத் பாதாள லோகத்தில் பிரவேசம் செய்த அனுமார் அஹிமஹியின் அரண்மனையை பார்த்தார். அரண்மனையை காவல் செய்வது ஒரு வானரமாக இருந்தது இவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நுழைய இருந்த இவரை அந்த வானரம் தடுத்தது. அரண்மனையை பார்த்துவிட்டு தான் சென்று விடுவதாக அனுமாரை அனுமதியின்றி அது நடக்காது என்று கூறி வெளியே செல்ல சொல்லியது அவ்வானரம். அனுமார் தன் பலத்தை உபயோகித்து நுழைய முயற்சித்தபோது அவ்வானரம் எதிர்ப்பு பலமாக இருந்தது. சண்டையிடும் நுட்பம், எதிர்க்கும் சக்தி இவைகளை பார்த்த அனுமார் இது சாதாரண வானரம் இல்லை என்பதை புரிந்து கொண்டார். யார் என்று வினவிய பொழுது, தான் இராமசேனையில் உள்ள அனுமாரின் புதல்வன் என்ற பதில் அனுமாரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

"அனுமார் பிரம்மசாரி. எப்படி நீ அவர் மகன் ஆகமுடியும்?"

"உண்மைதான். அனுமாருக்கு நான் அவர் பிள்ளை என்பது தெரியாது. அவருடைய இலங்கை விஜயத்தில் அவரது வாலில் இராவணன் தீயிட்டான். தீ வாலை சுடவில்லை, இலங்கையை எரித்து சாம்பலாக்கியது. இலங்கையை எரியிட்ட பின் என் தந்தை தனது வாலை கடலில் தொய்த்து எடுத்தார். அப்பொழுது வாலில் இருந்து வெளியான வேர்வை துளியினை முதலையான என் தாய் உண்டாள். [முதலை என்பதை மகரம் என்று சம்ஸ்கிருதத்தில் கூறுவர்.] அதனால் பிறந்தவன் நான் அதனால் என்னை மகரதுவஜ் என்று அழைப்பார்கள். இராணி சந்திரசேனாவின் சமயல்லறையில் பிறந்ததால் இராணி அவர்கள் என்னை அன்னை போல் பார்த்துக் கொள்கிறார்கள்"

"மகரதுவஜா! நீ அனுமாரை பார்த்திருக்கிறாயா?"

"இல்லை"
"அது நான் தான். ஶ்ரீஇராம லக்ஷ்மணர்களை காப்பாற்ற வேண்டிய முக்கிய காரணத்தினால் இங்கு வந்துள்ளேன்"
"வணக்கங்கள் பல்லாயிரம். காரணம் எதுவானாலும், நீங்கள் என் தந்தையே ஆனாலும் என்னை வென்று உள்ளே நுழையுங்கள் அல்லது அனுமதி பெறுங்கள்"
சப்தம் கேட்டு சந்திரசேனா அரண்மனையிலிருந்து வெளிவந்தாள்.
"மகரதுவஜா! என்ன சப்தம்?"

"இவர் என் தந்தை அனுமார். அனுமதியின்றி அரண்மனையில் நுழைய முயற்சிக்கிறார்"

"நான் இராமலக்ஷ்மணர்களை தேடி இங்கு வந்துள்ளேன். அஹிமஹிராவணர்கள் என்னை ஏமாற்றி இராமலக்ஷ்மணர்களை கைதியாக்கி இங்கு பாதாள லோகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்"

"அனுமாருக்கு என் நம்ஸ்காரங்கள். இராமலக்ஷ்மணர்களை தங்கள் தெய்வத்திற்கு உயிர் பலியாக கொடுப்பதற்கு சகோதரர்கள் இங்கு கொண்டு வந்துள்ளது உண்மை தான். இதனை முடிப்பதின் மூலம் அவர்கள் உலகையே வெல்ல முடியும் என்கிறார்கள். விடியற்காலை நரபலி இட இருக்கிறார்கள். கர்ப்பகிரஹத்தின் சாவி என்னிடமுள்ளது, இருந்தும் சகோதரர்கள் இணைந்து வரும் பொழுது சாவியை அவர்களுக்கு நான் கொடுக்க வேண்டும்"

"கடமை தவறாத வீரனாக என் மகனை வளர்த்ததிற்கு என் நன்றிகள். தாங்கள் என்னை கர்ப்பகிரஹத்தின் உள் வைத்து கதவை பூட்டி கொள்ளுங்கள். இராமரின் ஆசியின் நல்லதை நடத்த முடியும் என்று தின்னமாக நம்புகிறேன். தாங்கள் இந்த நல்லது நடக்க மனம் வைக்கவேண்டும்."

சிறிது நேரம் யோசித்த இராணி சந்திரசேனா ஹனுமாரை கர்ப்பகிரஹத்தில் வைத்து பூட்டி சாவியை எடுத்துச் சென்றாள்.

கோயிலில் அஹிராவணனும் மஹிராவணனும்

விடியற்காலத்திற்கு சற்று முன்பு அஹிராவணனும் மஹிராவணனும் மற்றவர்களும் பூஜைக்கான பொருள்களுடன் அங்கு வந்தனர். பூஜை அறையை திறந்தனர். பலிபீடத்தில் இருந்த இராமலக்ஷ்மணரை பார்த்தனர். பின் கர்ப்பகிரஹத்தினை திறக்க சென்றனர். அப்பொழுது கர்ப்பகிரஹத்திலிருந்து ஒரு தெய்வீக குரல் கேட்டது "கருவறை கதவுகளை திறக்க வேண்டாம் உள் வரவேண்டாம். நான் இபொழுது உக்கிரத்தின் உச்சியில் இருக்கிறேன். எனது உக்கிரத்தின் சிறு படிவத்தை பார்க்க வேண்டுமா? கருவறை விமானத்தை பார்!"

சகோதரர்கள் கருவறை விமானத்தை பார்த்தனர், பத்மதளமும், கலசமும் இன்றி பெரிய வெளியுடன் இருந்தது. "தாங்கள் எனக்காக கொடுக்கப்போகும் மிக புனிதமான இந்த நரபலியை எனக்கு விமானத்தில் தெரியும் வெளி வழியாக கொடுக்கவும். கர்ப்பகிரஹ கதவை திறக்காதீர்கள், என்னை உக்கிரத்தில் பார்க்கும் சக்தி தாங்களுக்கு இல்லை. எல்லோரும் வெளியேறுங்கள். பலியை எடுத்துக்கொண்ட பின் சற்றே சாந்தமான பின் குரல் கேட்டு நீங்கள் இருவர் மாத்திரம் கோயிலுக்குள்ளும் பின் கர்ப்பகிரஹத்திற்குள்ளும் வாருங்கள். தரும் மாபெரும் ஆசிகளை பெற்று செல்லுங்கள்" என்று திரும்பவும் அந்த தெய்வீக குரல் கேட்டது.

அளப்பறியா ஆனந்தமான அஹிமஹி

அனுமார் தான் அவர்களது இஷ்ட தேவதையின் குரலில் பேசினார் என்பது தெரியாத அஹிமஹி ராவணர்கள், தங்கள் இஷ்ட தெய்வத்தை ஊக்கிவித்ததில் மிகவும் ஆனந்தமடைந்தனர். மற்றவர்களை கோயிலை விட்டு வெளியே துரத்தினார்கள். ஶ்ரீஇராமலக்ஷ்மணர்களை பலி பீடத்திலிருந்து எடுத்து கயிற்றின் உதவியுடன் விமானத்தில் தெரிந்த வெளியிடை வழியாக கர்ப்பகிரஹத்தின் உள் சேர்ப்பித்தனர். பின் பலி மண்டபத்தை பூட்டினர், கோயிலை பூட்டினார். தெய்வத்தின் ஆணைக்காக கோயிலின் வெளியே காத்திருந்தனர்.

ஶ்ரீஹனுமாரின் கைத்திறம்

சிறிது நேரம் கழித்து, அஹிமஹிராவணர்களால் பூஜிக்கப்படும் தெய்வத்தின் குரலில் அனுமார் சகோதரர்களை ஆசிகளை பெற்றுக்கொள்ள அழைத்தார். இருவரும் கோயிலின் உள் சென்றனர். பின் பலி மண்டபத்தை திறந்து அங்கே தெய்வத்தின் ஆணையை எதிர்பார்த்து நின்றனர். "இருவரும் இணைந்து உள்ளே வாருங்கள். எனது சரணத்தினை தலை வணங்குங்கள், ஆசிகள் பெறுங்கள்" என்ற தெய்வத்தின் ஆணையை கேட்ட மாத்திரத்தில், கர்ப்பகிரஹ கதவை திறந்து எதிரில் இருந்த தெய்வத்தின் காலடியில் விழுந்தனர். தெய்வத்தின் கையில் இருந்த மாபெரும் வாள் சகோதரர்கள் கழுத்தில் அதே சமயம் விழுந்து அவர்களை மாய்த்தது.

சந்திரசேனா அனுமாருக்கு நன்றியை கூறினாள். தனது மகன் மகரதுவஜை பாதாள லோகத்திற்கு மன்னாக முடிசூட்ட செய்வேன், அதற்கு ஆசிகள் வேண்டி ஶ்ரீஇராமர், லக்ஷ்மணர், அனுமார் ஆகியோரை தாயும் மகனும் வணங்கினர். தங்களுக்கு காத்திருக்கும் அடுத்த பணியை முடிக்க மூவரும் போர்களம் புறப்பட்டனர்.

பேட் துவாரகாவின் தண்டி ஹனுமார் திருக்கோயில்

தண்டி ஶ்ரீஹனுமார் திருக்கோயில், பேட் துவாரகா, துவாரகா, குஜராத் பேட்துவாரகாவில் இருக்கும் ஶ்ரீகிருஷ்ணர் திருக்கோயிலில் இருந்து ஐந்து கிலோமீட்டர் கிழக்கில் மிகவும் அருமையான தனித்தன்மை வாய்ந்த தண்டி ஹனுமார் கோயில் உள்ளது. இக்கோயில் தனித்தன்மை பெற்றது ஏனெனில் இது ஶ்ரீஹனுமாரும், ஶ்ரீமகரதுவஜும் முதல் முதல் சந்தித்த தலமாகும். இக்கோயிலை நேருங்கும் பொழுதே "திரியோதாக்ஷர" மந்திரமான "ஶ்ரீராம ஜயராம ஜய ஜய ராம" என்பது நம்மை வந்தடைகிறது. இந்த "திரியோதாக்ஷர" மந்திரமான "ஶ்ரீராம ஜயராம ஜய ஜய ராம" என்பதை சமர்த்த ராமதாசர் அவர்கள் மந்திரமாக ஜபம் செய்து சித்தியானவர்.

மிகவும் அமைதியாகவும் ரம்யமாகவும் இருக்கும் சூழலில் அமைந்துள்ள இக்கோயிலில் ஒலிக்கும் "திரியோதாக்ஷர" மந்திரமான "ஶ்ரீராம ஜயராம ஜய ஜய ராம" தலத்தை மேலும் புனிதமாக்கிறது. பக்தர்களுக்கு பக்தி தானாகவே பற்றிக்கொள்ளும்.

மிக பெரிய வெளியின் நடுவில் ஆலமரம், அதன் அடியில் ஶ்ரீஹனுமாருக்கும் ஶ்ரீமகரதுவஜுக்கும் கோயில். எங்கு திரும்பினாலும் "திரியோதாக்ஷர" மந்திரமான "ஶ்ரீராம ஜயராம ஜய ஜய ராம" எழுதி வைத்திருக்கிறார்கள். வளாகத்தில் எங்கு சென்றாலும் மந்திரம் கேட்கிறது. மனதினை மேலும் அமைதிபடுத்துகிறது.

ஶ்ரீ மகரதுவஜ்

திருக்கோயிலில் நுழைந்த உடன் தந்தையும் மகனையும் தரிசிக்கலாம். ஶ்ரீஅனுமார் நமக்கு வலபுறம் இருப்பவர். இடப்புறம் ஶ்ரீமகரதுவஜ் இருக்கிறார். மகரதுவஜ் அனுமாரை விட சற்றே நெடியவராக காணப்படுகிறார், ஆனால் ஶ்ரீஹனுமாரை கவனித்தால் அது மெய்யல்ல என்பது தெரியும். கூர்ந்து கவனித்தால், அவரது வலது திருக்கரம் அபய முத்திரையை தரித்துள்ளது. இடது திருக்கரத்தினை "என்னுடன் என் தந்தை இருக்கும்போது பயம் ஏதும் வேண்டாம்" என்பது போல் அவரது மார்பில் வைத்துள்ளார். அவரது இடது திருப்பாதத்தின் கீழ் அரக்கன் ஒருவனின் தலையை அழுத்தியுள்ளார். அவரது வால் பூமியை தொட்டுக்கொண்டுள்ளது அரக்கனை சிரமம் ஏதுமின்றி கீழே கடத்திவிட்டார் என்பது போல் இருக்கிறது

ஶ்ரீஹனுமார்

ஶ்ரீமகரதுவஜருக்கு பக்கத்தில் ஶ்ரீஹனுமார் உள்ளார். அவரது உருவம் அவரது தொடைக்கு மேல் பாகுதி மட்டும் தெரிகிறது. அதனால் இவரின் முழு உருவம் இதைவிட நெடியதாக இருக்க வேண்டும். [ஏன் இப்படி தெரிகிறார் என்பதை சங்கடமோசன் பகுதியில் படிக்கவும்]அவரது வலது திருக்கரம் தலைக்கு மேல் தூக்கிய வண்ணம் இருக்கிறது. அவரது இடது திருக்கரம் மார்பில் வைத்துள்ளார். அவரது வால் வலது திருக்கரத்தை ஒட்டியே சென்று தலைக்கு பின் வளைந்துவிடுகிறது. தனது மகன் மகரதுவஜ் அரக்கனை அழிப்பதை பார்த்து ஓய்வாகவும் சற்றே மகிழ்ச்சியாகவும் இருப்பது போல் காணப்படுகிறார்.

தண்டி ஹனுமார் - பெயர் காரணம்

இருவருக்கும் நடுவில் ஒரு கம்பு இருப்பதை கவனியுங்கள். இந்த கம்புக்கு இங்கு என்ன வேலை? ஶ்ரீஹனுமாரோ ஓய்வாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். ஶ்ரீமகரதுவஜனும் தான் செய்யும் பணியை மிகவும் மகிழ்ச்சியாக செய்வதாக தான் காணப்படுகிறான். இருவர் திருகரங்களிலும் ஏதும் ஆயுதங்களும் இல்லை. இருக்கும் இந்த கம்பும் சும்மாதான் இருக்கிறது.

குஜராத்தில் மகிழ்ச்சியை மன எழுச்சியை களிப்பையும் கொண்டாட்டத்தையும் ’தண்டி’ என்னும் கோலை வைத்துதான் வெளிக்காட்டுகிறார்கள். அதனால் தான் மகரதுவஜனுடன் இருக்கும் ஹனுமாரையும், ஹனுமாருடன் இருக்கும் மகரதுவஜனையும் மகிழ்ச்சியாக இருப்பதால், ’தண்டி’ அடைமொழியுடன் அழைக்கிறார்கள்.

வடக்கு நோக்கி ஶ்ரீகணேசருக்கும் ஶ்ரீகால பைரவருக்கும் சன்னிதிகள் இக்கோயிலில் உள்ளன.

இத்திருக்கோயிலின் தனித்தன்மை

1. பாரதத்தில் இங்கு மட்டுமே அனுமாரும், மகரதுவஜனும் சேர்ந்து காணப்படுகிறார்கள்.

2. இருவரும் நிராயுதபாணியாக [ஆயுதம் ஏந்தாதவர்கள்] காணப்படுகிறார்கள்.

3. மகரதுவஜன் அரக்கனை அழிக்கும் பாவத்தில் காணப்படுகிறார்.

4. அனுமார் தொடைக்கு மேல் மட்டுமே தெரிகிறார்.

5. பேட் துவாரகாவில் இருக்கும் ஶ்ரீதுவாரகாதீஷ் ஶ்ரீஇராமரை போன்ற அலங்காரத்தில் இக்கோயிலுக்கு பல்லக்கில் வருகை தருகிறார். ஶ்ரீகிருஷ்ணர் ஶ்ரீஇராமரை போன்று அலங்கரிக்கபடுவது, பாரதத்தில் வேறு எங்கும் காணமுடியாத கோலம் இது.

6. "திரியோதாக்ஷர" மந்திரமான "ஶ்ரீராம ஜயராம ஜய ஜய ராம" என்பது இருபத்திநான்கு மணிநேரமும் ஜபிக்கப்படுகிறது.

இன்றைய தண்டி ஹனுமார் திருக்கோயில்

இன்று அறகட்டளை ஒன்று நிருவப்பட்டு இத்திருக்கோயிலை பராமரித்து நிர்வாகிக்கிறார்கள். பூஜ்ய குருஜி ஶ்ரீபிரம்மமுராரி, சீடர் பக்க்ஷி மகராஜ், அவர் சீடர் காஷ்மீரி பாபா பரம்பரையினர் "திரியோதாக்ஷர" மந்திரமான "ஶ்ரீராம ஜயராம ஜய ஜய ராம" என்பதனை குஜராத்தில் பிரபலபடுத்தினர். இன்று குஜராத்தில் பேட் துவாரகா, துவாரகா, போர்பந்தர், ராஜ்கோட் மற்றும் இதர இடங்களில் உள்ள ஏழு ஹனுமார் கோயில்களில் இருபத்திநான்கு மணி நேரமும் இம்மந்திரம் ஜபிக்கப்படுகிறது.

ஶ்ரீ சங்கடமோசனும் அயனாகும் அரசனும்

மனகுறையோ, உடல் உபாதயோ இருக்கும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து பூஜாரியிடமிருந்து ஒரு கொட்டைபாக்கு வாங்கி, பின் அதனை தங்கள் கையில் வைத்துக்கொண்டு "திரியோதாக்ஷர" மந்திரத்தை ஜபிக்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் விருப்பம் பூர்த்தியானதும் அந்த கொட்டைபாக்கை பூஜாரியிடமே சமர்பித்து விடுகிறார்கள்.

இங்குள்ள ஶ்ரீஹனுமார் சிறிது சிறிதாக பூமியில் புதைகிறார் என்பதும், என்று இவர் முழுவதும் பூமியில் புதைகிறாரோ அன்று கலியுகம் முடியும் என்பது நம்பிக்கை. ஶ்ரீஹனுமார் அடுத்து பிரம்மனாக இங்கிருந்து சென்று விடுவார் என்கிறார்கள்.

ஶ்ரீஹனுமார் ஜயந்தி உத்ஸவம் ஏழு நாட்களுக்கு இங்கு கொண்டாட்டப்படுகிறது. மகராஷ்ட்ரா, குஜராத் மாகாணங்களிலிருந்து பெரும் அளவில் பக்தர்கள் இதற்கு வருகை தந்து ஹனுமாரின் ஆசியை பெறுகின்றனர்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீஹனுமார் திருக்கோயில், பேட் துவாரகா, குஜராத்

 

அனுபவம்
"திரியோதாக்ஷர" மந்திரத்தின் வலிமையை உணர வேண்டும், ஹனுமாரின், மகரதுவஜின் மகிழ்ச்சியை உணர வேண்டும் என்றால் பேட் துவாரகா வாருங்கள். மனமகிழ்ச்சியுடன் திரும்புவது தின்னம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஶ்ரீ ஹநுமத் ஜயந்தி சிறப்பு பதிப்பு: டிசம்பர் 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+