ஶ்ரீஇராமர் "பித்ரு வாக்கிய பரிபாலனம்" என்னும் உயர்ந்த கொள்கையை கடைப்பிடித்து இராஜ்ஜிய பரிபாலனத்தை தம்பி பரதனுக்கு கொடுத்துவிட்டார். அது மட்டும் அல்லாமல் அயோத்தியாவையும் விட்டு பதிநான்கு வருடம் காட்டுக்கு செல்லவும் ஒப்புக்கொண்டார். தனது சகோதரன் லக்ஷ்மணன் மற்றும் மனைவி சீதாதேவியுடன் காட்டுக்கு செல்கிறார். ஶ்ரீஇராமன் காட்டுக்கு சென்ற பின் தசரதன் அயோத்தியில் உயிர் துரந்தார், மாமன் வீட்டிலிருந்து திரும்பிய பரதன் அயோத்தியாவின் அரசனாக மறுக்கிறார். மூத்தவருக்கே அதற்கு உரிமை என்கிறார். இராமரையே அரசாள அழைப்பது என்று முடிவு செய்து, அரச குடும்பத்தினர் அனைவரும் இராஜ ப்ரோகிதருடனும், மற்ற பண்டிதர்களுடனும் காட்டுக்கு புறப்படுகிறனர். சித்திரகூடத்தில் இராமரை அவர்கள் சந்தித்து, அயோத்திக்கு திரும்புமாறும் இராஜ்யத்தை ஆள வரவேண்டும் என்றும் பலரும் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கிறார்கள். ஆனால் இராமரோ, சாத்திரங்கள் தெரிந்தவரும் தந்தையும் ஆனவருக்கு கொடுத்த வாக்கை தான் மீற முடியாது என்று உறுதியாக எடுத்துரைக்கிறார், தான் அரசாள முடியாது என்பதிலும் காட்டில் வாசம் செய்வதிலும் தின்னமாக இருந்தார்.
ஒரு நேரத்தில், ஜபாலி [ஜாபாலி என்றும் அழைப்பர்] என்னும் பிராமணர், பரதனின் வாதத்திற்கு துணையாக தனது வாதத்தை முன் வைத்தார். எல்லோரும் தனித்தே பிறக்கிறோம் தனித்தே மரணத்தை ஏற்கிறோம். அப்படி இருக்கையில் என் தந்தை என் தாய் என்று யாரும் கிடையாது ஏன்னொனில் யாரும் யாருக்கும் உரிமையில்லை. எப்படி யாத்திரிகர்களுக்கு எந்த கிராமத்திலும் பாத்தியதை இல்லையோ அது போல் தான் இதுவும். அரசன் தனி, இராமன் தனி. என்று கூறியவர் ஒரு படி மேலேபோய் இறந்தவருக்காக எதையும் தியாகம் செய்வதின் முழுமை என்ன என்றார். அப்படி கொடுக்கப்படும் உணவு வீண்; இறந்தவர் சாப்பிடவா முடியும் என்கிறார். அண்டத்தை மிஞ்சியது ஏதும் இல்லை. கண்கள் காணாததை உதறிதள்ளுமாரும், கண்ணால் காண்பதற்கு மட்டும் முன்னுரிமை தரச்சொல்கிறார்.
நல்லொழுக்கமுடையோரில் சீரானவரான ஶ்ரீஇராமர் சாந்தமாக ஜபாலிக்கு பதில் கூறினார். இவர்கள் சொல்லி கேட்ட வார்த்தைகள் உண்மை போல் தோன்றினாலும் செயலுக்கு ஒவ்வாதவை. சாப்பிட கூடாத பழத்தை சாப்பிட சம்மதம் வாங்குவது போல் தான் இது. படிப்பும், நன்நடத்தையும், சீரான பார்வையும், நியாயமாகவும், இருப்பது போல் தன்னை பற்றி தானே நினைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு புத்தி சொல்ல வரலாமா? அரசாட்சி என்பதே உண்மையும் சத்தியமும் தான், அதனால் அரசன் உண்மையாகவும் சத்தியராகவும் இருப்பது வேண்டும். அண்டம் என்பது நிரூபிக்கப்பட்ட சத்தியம். மேலுலகிலிருந்து நமக்கு கிடைக்கும் வரனான இவ்வுண்மை மிகவும் உயர்ந்த சத்தியம். வேள்வி, பலி, தியாகம், வழிபாடு, வேதங்கள் எல்லாம் இந்த உண்மையை, சத்தியத்தை கருவாக வைத்து தோன்றியவை. தர்மவானான தசரதனின் ஆணையை எப்படி மீறமுடியும்? தர்மவானான அவருக்கு தான் கொடுத்த வாக்கை எப்படியும் கடைபிடிப்பேன். தனது வார்த்தைகளை ஶ்ரீஇராமர் முடிக்கும் பொழுது புத்திசாலிகள், நாத்திக வாதத்தை புறந்தள்ளுவார்கள் என்றும், தன் தந்தை இப்படிப்பட்ட மாறாத நாத்திகனை [ஜபாலியை], தர்மத்திற்கு புறம்பானவரை தனது அரசசபையில் வைத்திருந்திருக்க கூடாது என்றார்.
ஶ்ரீஇராமரின் ஆணித்தரமான வார்த்தைகளை கேட்ட ஜபாலி தான் நாத்திகன் இல்லை, இராமர் அயோத்தியா வரவேண்டும் என்னும் ஊந்துதலால் அப்படி பேசியதாக கூறுகிறார்.
இந்த ஒரு இடத்தில் மட்டுமே ஜபாலி அவர்கள் ஶ்ரீவால்மீகி இராமாயணத்தில் காணப்படுகிறார். அவரை பிராமணர் [பிராமணர் என்பது பிரம்மத்துவம் அடைந்தவரை குறிக்கும் சொல்] என்று அறிமுகம் செய்கிறார், ஶ்ரீவால்மீகி.
இதன் பிறகு ஜபாலி முனிவரை பற்றி புராணங்களில் அதிகமாக எங்கும் காணக்கிடைக்கவில்லை. இன்றைய ஜபல்பூர் நகரத்திற்கு இப்பெயர் வர காரணம் ஜபாலி முனிவர் அங்கு தவம் எய்தினார் என்பதாகும். வட கர்நாடகாவில் [துலு நாடு] பல திருக்கோயில்களின் தலபுராணத்தில் ஜபாலி முனிவர் அங்கு தவம் செய்ததாக காணப்படுகிறது. திருப்பதி மலையில் இருக்கும் ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலின் தல புராணத்தில் ஜபாலி முனிவர் பெயர் வருகிறது.
சித்திரகூடத்திலிருந்து அயோத்தியா திரும்பிய ஜபாலி தான் இராமரை திரும்ப அழைத்து வருவதற்காக சொல்லிய சொற்கள் இராமரை புண்படுத்தி விட்டது குறித்து வருத்தப்பட்டார். நற்காரியம் ஒன்று நடக்க வேண்டும் என்ற ஆவலில் தான் கூறிய வார்த்தைகளும் உபமானங்களும் இராமர் வாயால் தான் "மாறாத நாத்திகன்; தர்மத்தின் வழியிலிருந்து தவறியவன்; தவறான வழிநடத்தும் அறிவுடையவன்" என்ற பட்டம் பெற வைத்தது மன வேதனையை இன்னும் அதிகரித்தது. தசரதர் அவர் அரசசபையில் தன்னை வைத்திருந்திருக்க கூடாது என்று இராமர் சொல்லுமளவுக்கு தாம் வீழ்ந்துவிட்டோமே என்று வருந்தினார். இராமனின் மகுடாபிஷேகத்திற்கு பிறகு, ப்ரம்மனை குறித்து தவம் மேற்கொள்ள நினைத்து அயோத்தியாவிலிருந்து புறப்பட்டார்.
தெற்கு நோக்கி தனது யாத்திரையை தொடங்கினார், பல இடங்களில் நதிகரையில் தவம் இருந்தார். இப்படியே சென்ற அவர் ஒரு சமயம் ஶ்ரீஅஞ்சனா தேவி தனக்கு மக்கள்செல்வம் வேண்டி தவம் இருந்த இடத்தினை அடைந்தார். அவ்விடத்தின் மகிமையை அறிந்த அவர் இதுவே தனது தவத்திற்கு சிறந்த இடம் என்ற முடிவுக்கு வந்தார்.
தர்மத்தின் ரூபமான, புருஷருள் உத்தமமான ஶ்ரீஇராமரை தியானிப்பதற்காக இவ்விடத்தை விட சிறந்த இடம் ஏதிருக்கும்? ஜபாலி தவம் இங்கு மேற்கொண்டார்.
திருமலையில் கோயில் கொண்டுள்ள ஶ்ரீவெங்கடாசலபதியை தரிசிக்க ஏழு மலைகளை தாண்டி வரவேண்டும். ஶ்ரீவெங்கடாசலபதி சுவாமி வட இந்தியாவில் ஶ்ரீபாலாஜி என்று பிரபலம். அந்த ஏழு மலைகளில் ஒன்று அஞ்சநாத்ரி ஆகும். தனக்கு மக்கள் செல்வம் வேண்டி ஶ்ரீஅஞ்சனா தேவி தவம் இருந்த மலை என்பதால் இம்மலைக்கு அஞ்சநாத்ரி என்று பெயர்.
ஶ்ரீஜபாலி தவம் மேற்கொண்ட இடம் திருமலையில் திருக்கோயிலுக்கு சற்று தொலைவில் உள்ளது. ஶ்ரீவியாசராஜா, ஶ்ரீஹாத்திராம் பாவாஜி போன்ற மகான்கள் ஶ்ரீவெங்கடாசலபதிக்கு பூஜைகள் செய்துள்ளார்கள். கடைசியாக ஶ்ரீராமாநுஜர் பூஜை விதிகளை நிர்ணயத்து அதன்படி இப்பொழுது பூஜைகள் நடக்கின்றன. ஶ்ரீஹாத்திராம் பாவாஜியின் சமயத்தில் ஜபாலி ஹனுமார் திருக்கோயில் கட்டப்பட்டது. தற்பொழுது ஶ்ரீபிரயாக்ராஜ் மகராஜ் என்னும் சாது ஜபாலி ஹனுமார் திருக்கோயிலை நிர்வாகித்து வருகிறார்.
ஜபாலி அவர்கள் அஞ்சநாத்ரி மலைக்கு வந்த பொழுது, தான் சரியான இடத்திற்கு வந்துவிட்டதாக உணர்ந்தார். ஆனால் நீர்நிலை வேண்டும் என்பதாலும் அங்கு ஶ்ரீஹனுமாரின் சாந்தித்யம் இருக்க வேண்டும் என்பதாலும் சற்றே மேலே நடந்தார். அப்படிப்பட்ட தலத்தில் தவம் எய்தினால் தான் முக்தி பெறலாம் என்றும் நம்பிக்கையாக இருந்தார். மேலும் சென்ற ஜபாலி அவர்கள், தற்போது திருக்கோயிலுக்கும் ஆகாசகங்கைக்கும் நடுவில் உள்ள இடத்திற்கு வரும்போது, ஶ்ரீஹனுமாரின் இருப்பிடமாக உணர்ந்தார்.
அகாசகங்கைக்கு செல்லும் பாதையில் ஶ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோயிலில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் இருக்கும் இடத்தில் ஒரு குறுகிய வளைவில் "ஜபாலி ஶ்ரீஆஞ்சநேய சுவாமி தேவாலயமுலு" என்னும் தெலுங்கு பெயர் பலகையை பார்க்கலாம்.
இங்கிருந்து நாம் ஏற்றமான பாதையில் நடக்க வேண்டும். நூறு ஆண்டுகள் பழமையான மிக உயரமான மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து இருபுறமும் நம்மை வரவேற்கும். மிக அடர்த்தியான காட்டின் நடுவில் அமைந்திருக்கும் பாதை இது. சுமார் ஒன்னரை கிலோமீட்டர் தொலைவு தான். நமது மனம் சாந்தமாக இருக்குமாயின் சொர்கத்தில் இருப்போம், மனம் கனத்திருந்தால் பயம் நம்மை கவ்வும். ஆதலால் மனதினை சுத்தமாக வைத்திருங்கள், தெய்வதன்மை நம்மை ஆட்கொள்ளும்.
இவ்விடத்தில் ஜபாலி அவர்கள் ஶ்ரீஹனுமாரின் உணர்வமைதியை உணர்ந்தார். அவ்விடத்திலேயே தவம் மேற்கொள்ள ஆரம்பித்தார். முதலில் ஶ்ரீஹனுமாரை குறித்து தவம் இருந்தார். சில நாட்களுக்கு பின் ஶ்ரீஹனுமார் அவர் முன் தோன்றி ஶ்ரீசீதா பிராட்டியுடன் ஶ்ரீஇராம சந்திர மூர்த்தியின் தரிசனம் நிச்சயம் கிடைக்கும் என்று கூறினார். இதை கோட்ட ஜபாலி அவர்கள் புதிய தெம்புடன் தனது தவத்தை திரும்பவும் செய்யலானார். நீண்ட நாட்களுக்கு பின், அருகில் ஒரு நீர்நிலை தோன்றும், அதில் நீராடி தனது பாவங்களை போக்கி, பின் திரும்ப தவம் செய்யுமாறு தெய்வீக கட்டளையை பெற்றார். சில நாட்களில் அருகில் அழகிய நீர்நிலை ஏற்பட்டது. அதனை ஶ்ரீஇராமரே தனது அம்பினால் உற்பத்தி செய்தார் என்பதை அவர் அறிந்து மகிழ்ச்சியுடன் அதில் நீராடினார். பின் திரும்பவும் தவம் செய்து ஶ்ரீசீதா பிராட்டியாருடன் கூடிய ஶ்ரீஇராமரின் தரிசனம் கிடைக்கப் பெற்றார்.
ஶ்ரீஜபாலிக்கு காட்சி கொடுத்த அதே வண்ணம் இன்றும் ஶ்ரீஹனுமாரை இங்கு தரிசிக்கலாம். அந்த சுயம்பூ சுவாமியை கர்ப்பகிரஹமாக வைத்து இத்திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கர்ப்பகிரஹமும் அதன் மின் பெரிய முக மண்டபமும் கொண்டது திருக்கோயில். கோயிலின் முன்புறம் அழகிய குளம் உள்ளது. ஶ்ரீஇராமரால் ஏற்படுத்தப்பட்ட இத்திருக்குளத்தை "ராம குண்ட்" என்று அழைக்கிறார்கள். கோயிலின் பின்புறம் இருக்கும் திருக்குளம் "சீதா குண்ட்" என்று அழைக்கப்படுகிறது.
ஶ்ரீஜபாலி மஹரிஷிக்கு எப்படி காட்சி கொடுத்தாரோ அதே வண்ணம் இந்த க்ஷேத்திரத்தில் சுயம்பூ ஹனுமார் காட்சி அளிக்கிறார். அவர் சுந்தரர் என்ற பெயருக்கு ஏற்ப்ப மிக அழகாக இருக்கிறார். மூர்த்தம் சுமார் நான்கு அடி இருக்கும். ஹனுமார் நேர் கொண்ட காருண்யமான பார்வையில் பக்தர்களுக்கு ஆசிகள் வழங்குகிறார். வடக்கு நோக்கியிருக்கும் இவர் பக்தர்களுக்கு எல்லா ஐஸ்வரியத்தையும் அளிக்க வல்லவர். வலது திருக்கரத்தில் கதையை வைத்திருக்கிறார். இடது திருக்கரத்தினை வலிமையான தொடையில் ஊன்றியிருக்கிறார். தலையில் முத்துகளால் ஆன மகுடம் அணிந்துள்ளார். ஶ்ரீஇராம பரிவாரத்தினையும் கர்ப்பகிரஹத்தில் தரிசனம் செய்யலாம்.
அனுபவம்
வாருங்கள் ஶ்ரீஜபாலிக்கு தர்மத்தின் உருவான ஶ்ரீஇராமரின் தரிசனத்தை செய்து வைத்த இந்த காருண்ய மூர்த்தி
ஹனுமாரை தரிசித்து எல்லா ஐஸ்வரியத்தையும் அடைவோம்.
தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: டிசம்பர் 2018
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020